பெருநகர சென்னையில் சொத்துவரி உயர்த்தப்பட்ட நடவடிக்கை உடனடியாக நிறுத்தி வைப்பு; மாநகராட்சி அறிவிப்பு..!
Chennai Corporation announces immediate suspension of property tax hike
பொதுமக்கள் மற்றும் சொத்து உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்ததன பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சொத்துவரி உயர்த்தப்பட்ட நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைப்பதாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிப்பட்டுள்ளதாவது;
''குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டிருந்தது.

ஆனால், இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து தொடர் கோரிக்கைகள் பெறப்பட்டன. இக்கோரிக்கைகளைக் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.''என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, உயர்த்தப்பட்ட வரித்தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய அளவிற்கே மீண்டும் கொண்டு வரப்படும். அத்துடன், மாற்றியமைக்கப்பட்ட புதிய வரித்தொகையை ஏற்கனவே செலுத்திய உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்திய கூடுதல் தொகை வீணாகாது என்றும், அத்தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணவரியாக ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை மாநகராட்சியில் வருவாயைப் பெருக்கவும், வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களையவும் மண்டல அளவிலான அதிகாரிகளைக் கொண்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுகிறது.

இதில் பல வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களின் பரப்பளவு மற்றும் பயன்பாடு சரியாகக் கணக்கிடப்படாமல், குறைவான மதிப்பீட்டில் சொத்துவரி செலுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அத்தகைய சொத்துகளுக்குத் திருத்திய அமைக்கப்பட்ட புதிய சொத்துவரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, வரி உயர்த்தப்பட்டது.
ஆனால், திடீரென விதிக்கப்பட்ட இந்த வரி உயர்வால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர்கள், சரியான கால அவகாசமும் முன்அறிவிப்பும் இன்றி வரி உயர்த்தப்பட்டதாகப் புகார்களை எழுப்பினர்.
அத்துடன், நடைமுறையில் உள்ள பொருளாதாரச் சூழலில் இந்த கூடுதல் வரிப் சுமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சிக்குத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை அனுப்பியுள்ளனர். பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தற்போது சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
English Summary
Chennai Corporation announces immediate suspension of property tax hike