மத்திய கிழக்கில் அசாதாரண நிலை; துபாயில் கடுமையான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடி: வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்தியர்கள்..!
Indians have lost their livelihoods due to the severe economic and employment crisis in Dubai due to the Iran war
ஈரான்- அமெரிக்கா இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் புகலிடமாக விளங்கும் துபாயில் கடுமையான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசிய தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூண்களாகக் கருதப்படும் சுற்றுலா, விமானப் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த வணிகத் துறைகள் கடுமையாக முடங்கியுள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள் முற்றிலும் நலிவடைந்துள்ளன. அத்துடன், தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேப்போன்று துபாயில் செயல்பட்டு வந்த பல நிறுவனங்கள் போதிய வணிகம் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டு வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த கணக்காளரான முஜீப் ரஹ்மான் என்பவர், தான் பணிபுரிந்த கேட்டரிங் நிறுவனம் நஷ்டமடைந்ததால் தான் வேலை இழந்ததாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், பல நிறுவனங்கள் புதிய ஆட்களை வேலைக்கு எடுப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டதால், "அனைவரும் உயிர் பிழைப்பதற்கே போராடிக் கொண்டிருக்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேப்போன்று, ரஷ்ய குடும்பம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜாய் விவாண்டா என்ற பெண்மணி, மார்ச் மாதத்தில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் தனது முதலாளிகள் துபாயை விட்டு வெளியேறியதால் வேலை இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தினசரி வேலை தேடியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இந்த கடுமையாக சூழ்நிலையைச் சமாளிக்க ஐக்கிய அரபு அமீரக அரசு, வணிகங்களுக்கு உதவ 680 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளது. இருப்பினும், வேலை இழப்பு மற்றும் வருமானக் குறைவு காரணமாகத் துபாயில் உள்ள தொழிலாளர்கள் தங்களின் சொந்த நாடுகளில் இருக்கும் குடும்பங்களுக்குப் பணம் அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
English Summary
Indians have lost their livelihoods due to the severe economic and employment crisis in Dubai due to the Iran war