சர்வதேச விண்வெளி நிலையத்தில் 06 மணி 27 நிமிடங்களுக்கு முதல் Spacewalk செய்த இந்திய விண்வெளி வீரர் அனில் மேனன்..!
Indian astronaut Anil Menon performed the first spacewalk at the International Space Station for 06 hours and 27 minutes
நாசாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன் மற்றும் விண்வெளி வீராங்கனை ஜெசிகா மேயர் ஆகியோர், ISS அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே சுமார் 06 மணி 27 நிமிடங்களுக்கு விண்வெளியில் நடந்து (Spacewalk) செய்து சாதனை படைத்துள்ளனர். அத்துடன், புதிய சூரிய மின்தகடுகளை நிறுவுவதற்கான முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை அவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
ஜெசிகா மேயருக்கு இது ஆறாவது Spacewalk என்றாலும், அனில் மேனனுக்கு இது முதல் விண்வெளி நடையாகும். இந்தப் பணி அமெரிக்க கிழக்கு நேரப்படி வியாழக்கிழமை காலை 08.33 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 03 மணிக்கு நிறைவடைந்தது. இந்திய நேரப்படி, மாலை 06.03 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு நிறைவடைந்தது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட 281-ஆவது விண்வெளி நடை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விண்வெளி வீரர்கள், ISS-இன் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அறை (Quest Airlock) வழியாக வெளியேறி, Starboard 6 Truss பகுதியில் அமைந்துள்ள 3B மின்சார சேனலில் புதிய சூரிய மின்தகடுகளை பொருத்துவதற்கான மவுண்டிங் உபகரணங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டனர். இந்த கட்டமைப்பு, எதிர்காலத்தில் IROSA அதாவது International Space Station Roll-Out Solar Arrays எனப்படும் புதிய சுருட்டி விரிக்கக்கூடிய சூரிய மின்தகடுகளை நிறுவுவதற்கான அடித்தளமாக அமையும்.
இந்த புதிய IROSA அமைப்புகள் மூலம் விண்வெளி நிலையத்தின் மின்சார உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்றும், இதனால் ஆய்வகத்தின் முக்கிய அமைப்புகள் தடையின்றி செயல்படுவதோடு, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பூமியின் வளிமண்டலத்திற்குள் கொண்டு வந்து Controlled Deorbit என்று சொல்லப்படும் செயலிழக்கச் செய்யும் திட்டத்திற்கும் தேவையான மின்சாரம் கிடைக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆறு IROSA அமைப்புகள் விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு புதிய சூரிய மின்தகடுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் ISS-க்கு அனுப்பப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
.
English Summary
Indian astronaut Anil Menon performed the first spacewalk at the International Space Station for 06 hours and 27 minutes