மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகை; தீவிர பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸார்..! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் 02 நாள் பயணமாக அமித் ஷா நாளை புதுச்சேரி வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீஸார், மத்திய ரிசர்வ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை காவல் துறையில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் 'வண்ண விருது' வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 09-ஆம் தேதி ( ஞாயிற்றுக் கிழமை ) கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கிறது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று காவல் துறைக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளார். இதற்காக நாளை சனிக்கிழமை மாலை மத்திய அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகை தரவுள்ளார்.

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையம் செல்லும் அமித் ஷா சாலை மார்க்கமாக ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள ஓட்டல் அக்கார்ட்டில் ஓய்வெடுக்கவுள்ளார். 

அங்கிருந்து அவர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை விழா நடக்கும் கோரிமேடு போலீஸ் மைதானம் செல்கிறார். இதனால், விமான நிலையம் முதல், ராஜீவ் காந்தி சதுக்கம், கோரிமேடு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி மத்திய ரிசர்வ் படையின் 08 கம்பெனி பாதுகாப்புப் படையினர் புதுவை வந்துள்ளனர். புதுவை காவல்துறையை சேர்ந்த 500 போலீஸார் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர். அவர்களுடன் ஐஆர்பின் மற்றும் ரிசர்வ் படையினர் என 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதையொட்டி புதுவையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, நாளை மதியம் 02 மணி முதல் கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 09) காலை 05.30 மணி முதல் மத்திய அமைச்சர் புறப்பட்டு செல்லும் வரை பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், தேவைக்கேற்ப அந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று பாதையில் வாகனங்கள் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்து, சிவாஜி சிலையிலிருந்து வாகனங்கள் முத்தியால்பேட்டை வழியாக திருப்பிவிடப்படும். ஜிப்மரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக இந்திராகாந்தி சிலைக்கு வாகனங்கள் திருப்பிவிடப்படும். அமைச்சரின் முழு பயண வழித்தடத்திலும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என போக்குவரத்து எஸ்பி திவ்யா தெரிவித்துள்ளார்.

புதுவை ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ள உத்தரவில், மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது புதுவையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பறக்க தடை மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

அதேப்போன்று, ஆகஸ்ட் 08 மற்றும் 09-ஆம் தேதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் உட்பட எந்தவொரு வான்வழி பறக்கும் சாதனங்களையும் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன் பிரிவு 223 மற்றும் சட்டத்தின் பிற பொருத்தமான பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையொட்டி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடக்கும் முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்திகை நிகழ்வை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்துள்ளார். அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான், காவல் துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1000 police personnel will be deployed for security during Union Home Minister Amit Shahs visit to Puducherry tomorrow


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->