கொசுவே இல்லாத நாடு என்ற வரலாற்று பெருமையை இழந்தது ஐஸ்லாந்து..!
Iceland has lost its historical pride of being a mosquito free country
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து, உலகில் கொசுக்களே இல்லாத நாடு அறியப்பட்டது. இனப்பெருக்கம் செய்யத் தேவையான, நிலையான மிதமான வெப்பநிலை இல்லாததால், அங்கு கொசுக்கள் இல்லாமல் இருந்தன.
ஆனால், பருவநிலை மாறுபாடு பிரச்சினை தற்போது ஐஸ்லாந்தையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் தலைநகரான ரெய்க்ஜாவிக் நகரின் தென்மேற்கில் உள்ள பனிப்பாறை பள்ளத்தாக்கான கிஜோசில் கொசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஹஜால்டசன் என்பவர் உள்ளூர் உயிரினங்கள் தொடர்பாக, சமூக வலைதளத்தில் சில பூச்சி படங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு விசித்திரமான ஈ போன்ற பூச்சி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், ஹஜால்டசன் அந்த பூச்சிகளை அடையாளம் காண, ஐஸ்லாந்தின் இயற்கை வரலாற்று நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். அங்கு பூச்சியியல் வல்லுநர், அது 'குலிசெட்டா அன்னுலாட்டா' என்ற ஒரு கொசு வகை என்பதை உறுதி செய்துள்ளார். இந்த இனங்கள் ஐரோப்பா மற்றும் வட ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுபவை. கப்பல் கன்டெய்னர்கள் வழியாக அந்த கொசுக்கள் வந்திருக்கலாம் என, யூகிக்கப்படுகிறது.
பொதுவாக, ஐஸ்லாந்து மே மாதத்தில் 20 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமான வெப்பநிலையை அரிதாகவே இருக்கும். அந்த வெப்ப அலைகள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்காது என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவியுள்ளது.
எனவே கொசு இனத்தை உருவாக்கும் அளவுக்கு ஐஸ்லாந்து வெப்பநிலை மாறிவிட்டதா என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Iceland has lost its historical pride of being a mosquito free country