பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் அரசு பள்ளியில் ஹிந்து மாணவியர் கட்டாய மத மாற்றம் செய்யும் தலைமையாசிரியை ..?
Hindu girls in a government school in Pakistans Sindh province are forced to convert
பாகிஸ்தானில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள், அங்குள்ள சிந்து மாகாணத்தில் மட்டுமே அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிந்து மாகாணத்தின் மிர்பூர் சக்ரோவில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஹிந்து மாணவியரை கட்டாய மத மாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, படிப்பை தொடர விரும்பினால், குறித்த மாணவியர் முஸ்லிமாக மாற வேண்டும் என, பள்ளியின் தலைமையாசிரியை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், தலைமையாசிரியை ஹிந்து மதம் குறித்து இழிவாக பேசியதாகவும், முஸ்லிம் மதத்துக்கு மாறாத மாணவியரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மதமாற்ற சர்ச்சை குறித்து சிந்து மாகாண கல்வி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 'சம்பந்தப்பட்ட பள்ளியில் சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும், மாணவியர், அவர்களது பெற்றோர், பள்ளி தலைமையாசிரியை மற்றும் பிற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். யாரையும் மத மாற்றத்திற்கு நிர்ப்பந்திக்கவில்லை' என்று கூறியுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானில் ஹிந்து சிறுமியர் அடிக்கடி கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்ற செய்திகள் அடிக்கடி வெளியாவதுண்டு. அத்துடன், அவர்கள் வயதான முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. ஆண்டுதோறும் சுமார், 1,000-க்கும் மேற்பட்ட சிறுமியர் இவ்வாறு கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாவதாக அந்த அமைப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Hindu girls in a government school in Pakistans Sindh province are forced to convert