பிரான்ஸில் பள்ளி மாணவர்கள் போராட்டம்; 3,000-க்கும் மேற்பட்டோர் கைது; 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்; நடந்தது என்ன..?
Escalating school student protests in France
பிரான்ஸ் நாட்டில் பள்ளி மாணவர்களின் போராட்டம்வெடித்துள்ள நிலையில், கண்ணீர்ப்புகைக் குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவனின் கை சேதமடைந்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் கல்வித் துறை அமைச்சர் எடுவார்ட் ஜெஃப்ரே, சுமார் 500 பள்ளிகளை பகுதி அளவில் அல்லது முழுவதுமாக மூடப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் தேசியளவில் போராடி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அத்துடன், இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மாணவர் போராட்டம் தொடங்கியதில் இருந்து சுமார் 24 பள்ளிகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் கிடைத்துள்ளது. அத்துடன், சுமார் 78 ஆசிரியர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், பள்ளி மாணவர்களுடன் கல்லூரி மாணவர்களும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லென்ஸ் நகரில், போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டை வீசியுள்ளது. அது வெடிக்காத நிலையில், அதை மீண்டும் போலீஸார் மீது எறியும் நோக்கில், 15 சிறுவன் அந்த குண்டை எடுத்துள்ளார்.
அப்போது அது அவரது கையில் இருக்கையிலே வெடித்த நிலையில், அந்த சிறுவனின் கை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, பிரான்ஸ் முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு படுமோசமடைந்துள்ளதுதாகவும், பள்ளிகளுக்குப் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், காலை 08 மணிக்குச் செல்லும் மாணவர்கள் மாலை 06 மணி வரை பள்ளியிலேயே இருக்க வேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி நேரத்தில் பெரும் பகுதி நேரத்தைச் வெறுமனே சும்மா கழிப்பது மாணவர்களுக்கு மனச்சோர்வையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தலைநகர் பாரீஸின் புறநகரில் உள்ள பள்ளிகளில் தொடங்கிய போராட்டம், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் படிப்படியாக அதிகரித்து நாடு முழுவதும் பரவியுள்ளது. இன்று பள்ளி மாணவர்களோடு சேர்ந்து கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டில் உள்ள 3,700-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பிரான்ஸ் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
English Summary
Escalating school student protests in France