எட்டு போர்கள், நோபல் இல்லை....! ஆனால் பரிசு கிடைத்ததாக டிரம்ப் பதிவு...!
Eight wars no Nobel Prize But Trump posted that he had received award
அமைதிக்கான நோபல் பரிசை பெற வேண்டும் என்ற விருப்பத்துடன், “நான் எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை வலியுறுத்தி வந்தபோதும், 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்கவில்லை.

அந்த ஆண்டுக்கான உயரிய விருது, வெனிசுலா நாட்டின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் உலக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ, “எனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்வேன்” என்று கூறியது புதிய சர்ச்சைக்கு தீப்பொறியாக அமைந்தது.
மச்சாடோவின் இந்தக் கருத்துக்கு நோபல் கமிட்டி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. நோபல் பரிசு ஒருவருக்கு வழங்கப்பட்டால், அது அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கே உரியதாகும்; அதை பிறருக்கு வழங்கவோ, பகிர்ந்து கொள்ளவோ இயலாது என நோபல் அமைப்பு தெளிவாக அறிவித்தது.
இந்த விவாதங்களுக்கு மத்தியில், மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் டிரம்பை நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது, தன்னிடம் வழங்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம் வழங்கியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த நிகழ்வு குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை.இந்த நிலையில், டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில்,“வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.
அவர் பல சோதனைகளை கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக, அவர் தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையின் அழகான வெளிப்பாடு. நன்றி மரியா!”என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Eight wars no Nobel Prize But Trump posted that he had received award