நாத்திகம், பிற மதங்களுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை கொண்ட அலிரேசா அராபி ஈரானின் புதிய தலைவராக தேர்வு; அமெரிக்காவின் அடுத்த இலக்கு இவர்..?
Alireza Arabi elected as Irans new leader
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வான்வெளி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளார். அயதுல்லா அலி காமேனியின் மறைவு ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 35 ஆண்டுகளாக ஈரானை இவர் ஆட்சி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு பின்னர், ஈரானின் அதி உயர் தலைவராக யார் வருவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்தவகையில், அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் மூத்த மதத்தலைவர் அலிரேசா அராபி ஆகியோரில் ஒருவரே ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்பான நிபுணர்கள் அவை கூடி தேர்ந்தெடுக்கும் வரை ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவர் பொறுப்புக்கு அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அலிரேசா அராபி..?
இவர் 1959-இல் ஈரானில் பிறந்த அலிரேசா அராபி 11 வயதிலேயே மத பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவரின் தந்தை இப்ராகிம் அராபி, ஈரானியப் புரட்சியின் தந்தையாக கருதப்படும் அயதுல்லா கொமேனிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிறு வயதிலேயே அலிரேசா அராபியின் கைகளுக்கு முக்கிய பொறுப்புகள் வந்தது.
ஈரானில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவருக்கு ஒட்டுமொத்த மதக் கல்வி நிலையங்களை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. நாட்டின் சட்டங்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் 12 பேர் கொண்ட குழுவில் ஒருவராகவும், அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட Assembly of Experts அவையின் உறுப்பினராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 2022-இல் வத்திக்கான் நகரில் கிறிஸ்தவ ஆன்மிக தலைவர் போப் பிரான்சிஸைச் சந்தித்துப் பேசிய ஈரானிய மூத்த மதகுருக்களில் இவரும் ஒருவராவார். இதனபடி, பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அலிரேசா அராபி தற்போது ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாத்திகம் மற்றும் பிற மதங்களுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக இவர் கருதப்படுகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஈரானில் பெண்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற மஹ்சா அமினி போராட்டத்தின் போது, இவர் போராட்டக்காரர்களை மிகக் கடுமையாக விமர்சித்தது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பதற்றமான சூழலில், அவர்களின் அடுத்த இலக்காக அலிரேசா அராபி மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் போரில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வரும் ஈரானை அதில் இருந்து மீட்டு கொண்டுவரும் பொறுப்பும் இவர் மேல் விழுந்துள்ளது.
English Summary
Alireza Arabi elected as Irans new leader