பனியால் உறைந்துள்ள அமெரிக்கா; 30 பேர் பலி: 07 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு..!
30 people have died in an unprecedented snowstorm in the United States
அமெரிக்கா முழுவதும் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 'ஃபெர்ன்' என்ற பெயரிடப்பட்ட கடுமையான பனிப்புயல் சுமார் 1,300 மைல் பரப்பளவிற்கு வீசி வருகிறது. இதனால் அந்நாட்டின், வடகிழக்கு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவும், தெற்கு பகுதிகளில் பனிக்கட்டியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. அத்துடன், மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான பனிப்புயலாக இந்த பனிப்புயல் கருதப்படுகிறது.
வரலாறு காணாத வகையில், நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 11 அங்குலம் வரையும், பிட்ஸ்பர்க் நகரின் வடக்கு பகுதிகளில் 20 அங்குலம் வரையும் பனி கொட்டியுள்ளது. இந்த சீரற்ற வானிலை காரணமாக சாலை விபத்துகள் மற்றும் கடும் குளிரில் சிக்கி இதுவரை 30 பேர் வரை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பனிப்புயலின் தாக்கம் காரணமாக நியூயார்க் நகரில் மட்டும் கடும் குளிரால் 08 பேர் பலியாகியுள்ளதோடு, கன்சாஸ் பகுதியில் ஆசிரியை ஒருவர் பனியில் உறைந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்தோடு, மெயின் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்படும் போது விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 06 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆர்கன்சாஸ் மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் பணியினால் ஏற்பட்டுள்ள விபத்துகள் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த பனி புயலால் சுமார் 10 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 07 லட்சம் பேர் இன்னும் இருளில் தவித்து வருகின்றனர். பெரும்பாலான விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று மட்டும் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த '2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைவான வெப்பநிலை தற்போது பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
English Summary
30 people have died in an unprecedented snowstorm in the United States