'தீவிரவாதத்தை அரசு கொள்கையின் கருவியாக பாகிஸ்தான் தொடர்ந்து பயன்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது'; ஐ.நா.வில் இந்தியா பதிலடி..!
India retaliated at the UN stating that Pakistans continued use of terrorism as an instrument of state policy cannot be tolerated
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் அதே ஆண்டு மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் எல்லை தாண்டிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானை மிக மோசமான அண்டை நாடு என்றும், முக்கிய நகரங்களில் தீவிரவாத பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் வெளிப்படையாக நடத்துவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய மிக மோசமான காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து இந்திய குடிமக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு எனவும் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச சட்ட விதிகள் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் பர்வதநேனி ஹரிஷ் மிகக் கடுமையான பதிலடியை வழங்கியுள்ளார்.

அதாவது, தீவிரவாதத்தை அரசு கொள்கையின் கருவியாக பாகிஸ்தான் தொடர்ந்து பயன்படுத்துவதை சகித்துக் கொள்வது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதே பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது என்று கூறியுள்ளதோடு, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகே இந்தியா தரப்பில் பொறுப்பான பதில் வழங்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு தனது ஆதரவை நம்பகமான மற்றும் மாற்ற முடியாத வகையில் முடிவுக்குக் கொண்டுவரும் வரை, 65 ஆண்டுகள் பழமையான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அத்துடன், தனது சொந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பற்றி பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
English Summary
India retaliated at the UN stating that Pakistans continued use of terrorism as an instrument of state policy cannot be tolerated