வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு..!
15 Indian tourists die in boat accident in Vietnam!
தெற்கு வியட்நாமில் சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் பயணித்த இந்திய சுற்றுலாப் பயணிகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ள ஹான் மே ரூட் ங்வோய் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இந்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 04 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தினை தொடர்ந்து அங்கிருந்த எல்லை பாதுகாப்புப் படை, கடற்படை, கடலோர காவல் படை ஆகியவை மீட்புப் பணியில் இணைவதற்கு முன்பே அப்பகுதியில் இருந்த மற்ற படகுகளில் இருந்தவர்கள், பாதிக்கப்பட்ட பயணிகளை நீரில் இருந்து மீட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் பெரிய அலைகள் இருந்ததாலும், பலர் படகுக்குள் சிக்கிக்கொண்டதாலும் மீட்புப் பணி சவாலாக இருந்ததாக வியட்நாமின் 'விஎன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், உயிருடன் மீட்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், இந்த படகு விபத்துக்கு பலத்த காற்று, பெரிய அலைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாகாண அதிகாரி நுயென் டியென் ஹை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் விபத்து குறித்து உறுதிப்படுத்தி உள்ள வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம், உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது;
''பல இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு ஒன்று, வியட்நாமின் பு குவோக் தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர சம்பவம் நடந்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பவம் குறித்த துல்லிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகவல்களையும உதவிகளையும் வழங்க இந்திய தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை, +84 36 281 7930, +84 91 552 37 14 and +84 33 452 0414 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
ஹனேயிலும ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை +84 91 308 9165 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எந்தவொரு உதவிக்கும் அல்லது சந்தேகங்களுக்கும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
15 Indian tourists die in boat accident in Vietnam!