வரும் 19-ம் தேதி வரை தொடரும் மழை எச்சரிக்கை...! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை...? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில், வரும் 19-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, சில மாவட்டங்களில் கனமழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், வானிலை நிலவரத்தைக் கவனித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை அடுத்த 2 நாட்களில் முழுமையாக விலகுவதற்கான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில், தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகியுள்ளது.தெற்கு இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில், சுமார் 3.1 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இந்தச் சுழற்சியில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது.

அக்டோபர் 13: கடலோர மாவட்டங்களில் மிதமான மழை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 14: தென் மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம்.

அக்டோபர் 15: பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடி, மின்னலும் ஏற்படலாம். தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அங்கும் பலத்த காற்று வீசக்கூடும்.

அக்டோபர் 16: 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.இந்தப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 17: வட மாவட்டங்களிலும் மழை தீவிரமடையும்
திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

அக்டோபர் 18: 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 19: 18 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்
திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.இந்த மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது
அக்டோபர் 13 முதல் 17-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.அக்டோபர் 13 முதல் 15-ஆம் தேதி வரை உள் தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும்.அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கலாம்.நாளை (அக்டோபர் 14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை
தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்வதற்கு எந்தவித எச்சரிக்கையும் தற்போது விடுக்கப்படவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain warning to continue until the 19th Which districts experience heavy rain


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->