இந்தியா கூட்டணிப் போராட்டத்தில் திமுக மௌனம் ஏன்...? காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அனல் பறக்கும் கேள்விகள்..! - Seithipunal
Seithipunal


தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்களில், நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க. பங்கேற்காதது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த தி.மு.க. தற்போது மௌனம் காப்பதன் பின்னணி என்ன என்றும் அவர் வினவியுள்ளார்.

இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கக் கோரியும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றது தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதற்குத் தடை விதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே, எம்.ஏ. பேபி, டி. ராஜா, திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை பா.ஜ.க.வைப் பாசிசக் கட்சி என்று கடுமையாக விமர்சித்த தி.மு.க. தரப்பில் இருந்து ஒருவர் கூட இந்தப் போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தி.மு.க.வினர் ஒருவர்கூடக் களமிறங்காதது ஏன் என்பதே அக்கட்சித் தலைமையிடம் முன்வைக்கப்படும் முக்கியக் கேள்வியாகும்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வலியுறுத்தியும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 6-ஆம் தேதி நாடாளுமன்றத்திலிருந்து பேரணி நடைபெற்றது. அக்டோபர் 7-ஆம் தேதி ஜன்பத் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்தப்பட்டது. அக்டோபர் 8-ஆம் தேதி ராஜ்காட்டில் அறப்போராட்டம் நடைபெற்றது. அக்டோபர் 9-ஆம் தேதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டதுடன், குடியரசுத் தலைவரையும் சந்தித்தனர்.

அக்டோபர் 10-ஆம் தேதி சி.ஜே.பி. அமைப்பின் போராட்டமும், அக்டோபர் 11-ஆம் தேதி இடதுசாரி அமைப்புகளின் போராட்டமும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 12-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியும் போராட்டமும் நடத்தப்பட்டன.இத்தனை தொடர் போராட்டங்கள் நடைபெற்றபோதிலும், நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் அவற்றில் பங்கேற்காதது ஏன்? மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்தால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் தி.மு.க. தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறதா? வகுப்புவாத எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதா?

நேற்று வரை பா.ஜ.க.வைப் பாசிச, மக்கள் விரோதக் கட்சி என்று முழங்கிய தி.மு.க.வினர் இன்று அமைதி காப்பது ஏன்? இந்தக் கேள்விகளை எழுப்பும்போது தரக்குறைவான விமர்சனங்களையும் தனிநபர் தாக்குதல்களையும் முன்னெடுப்பது முறையான அரசியலா? இதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?

காங்கிரஸ் கட்சி எழுப்பும் கேள்வி மிகவும் எளிமையானது. நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்பதுதான் அது.பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் எதிர்த்துப் போராடுவதாகத் தொடர்ந்து கூறிவரும் தி.மு.க., தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கிப் போராடும் நிலையில் எங்கே இருக்கிறது? முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் தனது உரையின் நிறைவில், 'சனாதனம் ஒழிக' என்று முழங்கினார்.

ஆனால், அடுத்த கூட்டத்தொடரில் அந்த முழக்கம் ஏன் மறைந்துபோனது? சட்டமன்றத்தில் முழக்கம், அதன் பிறகு அமைதி, வீதிகளில் மௌனம், 'முரசொலி'யில் தனிநபர் தாக்குதல் என இதுதான் தி.மு.க.வின் அரசியல் நடைமுறையா? மோடி, அமித்ஷா ஆகியோரை உண்மையாகவே எதிர்க்கிறீர்கள் என்றால், தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்களில் தி.மு.க.வின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருக்க வேண்டாமா?

அவர்களுடன் தி.மு.க.வுக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கிறது? அதை விளக்குவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? திரைமறைவில் ஏதேனும் ரகசிய உடன்பாடு உள்ளதா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? தமிழகத்துக்குள் பா.ஜ.க. நுழைய முடியாத வகையில் மாநிலத்தை மாற்றியுள்ளதாகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு உரத்த குரலில் முழங்கிய தி.மு.க., தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் செயல்படத் தயாராகிவிட்டதா?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தி.மு.க. நடத்தும் தனிநபர் தாக்குதல்கள் ஒருபோதும் பதிலாகிவிட முடியாது. அக்கட்சியின் மௌனம் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியைத் தரக்குறைவாக விமர்சிப்பதைத் தவிர்த்து, எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு தி.மு.க. தலைமை தெளிவான விளக்கமளிக்க வேண்டும். இதனை உணர்ந்து அக்கட்சித் தலைமை செயல்பட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why DMK silent India alliance struggle Congress leader Manickam Thakur burning questions


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->