டயரை வைத்து கால்பந்து விளையாடிய காட்டு யானை...! கூடலூரில் மூதாட்டியின் வீட்டின் முன்பு நடந்த வினோதம்...!
wild elephant played football tire strange thing happened front old woman house Gudalur
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன்பு கிடந்த பழைய டயரைப் பந்துபோல் உருட்டியும், கால்களால் உதைத்தும் காட்டு யானை விளையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் வீட்டின் வாசலில் நீண்ட நேரம் முகாமிட்ட யானையைக் கண்டு அச்சமடைந்த மூதாட்டி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். யானையின் இந்த வினோதச் செயல் கண்காணிப்புக் கருவியில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மாக்கமூலா பகுதியில் கடந்த சில மாதங்களாகக் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று அப்பகுதிக்கு வந்தது.அங்குள்ள மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன்பகுதிக்குச் சென்ற யானை, உணவு கிடைக்குமா எனத் தேடி அங்கும் இங்குமாகச் சுற்றியது.
அப்போது வீட்டின் பக்கவாட்டில் கிடந்த பழைய டயர் அதன் துதிக்கையில் பட்டது.டயரைக் கண்டதும் அதனைத் துதிக்கையால் உருட்டத் தொடங்கிய யானை, பின்னர் அதைத் தூக்கி வீசியது. தொடர்ந்து, கால்களால் உதைத்தும் டயரை முன்னும் பின்னுமாக உருட்டியும் விளையாடியது.
கால்பந்தை உதைத்து விளையாடுவதைப் போல யானை செயல்பட்டது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி, யானையின் நடமாட்டத்தால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு விழித்தார். ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தபோது, தனது வீட்டின் முன்பே காட்டு யானை டயருடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
யானை சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிடும் என்று மூதாட்டி எதிர்பார்த்தார். ஆனால், யானை அங்கிருந்து நகராமல் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக டயரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. இதனால் அச்சமடைந்த மூதாட்டி, வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தார்.
பின்னர், இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதற்கிடையே, நீண்ட நேரம் டயருடன் விளையாடிய காட்டு யானை தானாகவே அங்கிருந்து சென்றது.யானை சென்ற பின்னரே மூதாட்டியும் அப்பகுதி மக்களும் நிம்மதியடைந்தனர்.
வீட்டின் முன்பு கிடந்த பழைய டயரை யானை உருட்டியும் உதைத்தும் விளையாடிய காட்சிகள் கண்காணிப்புக் கருவியில் பதிவாகியுள்ளன. இந்த வினோதக் காட்சி அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
English Summary
wild elephant played football tire strange thing happened front old woman house Gudalur