தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கமிஷன் வாங்க..? தவெக அரசிடம் சீமான் கேள்வி..!
Seeman questions the TVK government regarding the purchase of electricity from the private sector
''கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது, மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் கையூட்டுக்காக (கமிசன்) திமுக அரசு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய முதல்வர் விஜய், இன்று தனது ஆட்சியில் அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கையூட்டு (கமிஷன்) வாங்க?''என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகு றித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு (யூனிட்) மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் சொந்த மின் உற்பத்தி திட்டங்களை வலுப்படுத்தாமல், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நீண்டகாலமாக பெரிய முதலீடு ஏதும் செய்யாமல் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் 2 லட்சம் கோடிகள் அளவுக்கு கடனில மூழ்கியுள்ளது. அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் மேலும் கடன்தான் அதிகமாகும்.
உற்பத்தியில் முதலீடு செய்வதுதானே நிலையான தீர்வை நோக்கி நகரும். ஒவ்வொரு முறையும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதையே தீர்வாகக் கூறிக் கொண்டிருந்தால், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது?
இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு எப்போது வரும்? அதற்கான திட்டமும் காலக்கெடுவும் எங்கே? மின் உற்பத்திக்கு அணு மின் திட்டமும், அனல் மின் திட்டமும் மட்டும்தான் உள்ளதா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களே இல்லையா? அவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்தாதது ஏன்?
கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது, மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் கையூட்டுக்காக (கமிசன்) திமுக அரசு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய முதல்வர் விஜய், இன்று தனது ஆட்சியில் அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கையூட்டு (கமிஷன்) வாங்க?
தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழல் முறைகேடுக்கு வழிவகுத்தது என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் விஜய், அதைவிட அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்வது ஏன்? அன்று தவறு என்று சொன்ன கொள்கை, இன்று ஆட்சிக்கு வந்ததும் சரியாகிவிட்டதா?
2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மின்சாரம் ஓர் அலகு 4.85 ரூபாய் முதல் 5.85 ரூபாய் வரை அளவிற்குத் தனியாரிடம் வாங்கப்பட்டது. அவசரத் தேவைக்காக அதனை 21 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வாங்கிய பொழுது திமுக அரசை கடுமையாக எதிர்த்தோம்.
ஆனால், முந்தைய திமுக ஆட்சியின் கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய தவெக அரசின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது எப்படி? அதற்கான நியாயத்தை மக்களிடம் விளக்க தவெக அரசு தயாரா?
தவெக ஆட்சிக்கு வந்து, கடந்த 5 மாதத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக அல்லல்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில், இப்பொழுது ஓர் அலகு 35 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்தால், அதனை காரணமாக வைத்து மேலும் எத்தனை மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கப்போகிறீர்கள்?
மின் தேவை அதிகரிப்பதை முன்கூட்டியே கணித்து, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையல்லவா? பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசரமாக அதிக விலைக்கு வாங்குவதற்கு அரசு எதற்கு? நிர்வாகம் எதற்கு? தனியாக மின்துறைதான் எதற்கு?
அரசினுடைய மின் நிலையங்களில் நிறுவப்பட்ட உற்பத்தித்திறன் எவ்வளவு? தற்போது பயன்படுத்தப்படும் திறன் எவ்வளவு? முழுமையாக உற்பத்தி செய்ய முடியாததற்கான காரணங்கள் என்ன? தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்திலேயே, மின்வெட்டு ஏற்படும் அளவிற்குத் தமிழ்நாடு மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. அவற்றைச் சரிசெய்ய தவெக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
அவற்றையெல்லாம் செய்யாமல் ஆய்வு என்ற பெயரில் மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் சென்று வந்தது தங்கள் கட்சியின் விர்ச்சுவல் வாரியர்ஸ் ரீல்ஸ் போடுவதற்கு மட்டும் தானா?
மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்த அவசரத் தேவையைக் காரணமாக்கி எந்த விலையிலும் மின்சாரம் வாங்கலாம் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறைந்த செலவில் மின்சாரம் பெறுவதற்கான மாற்று வாய்ப்புகள் ஆராயப்பட்டனவா? கொள்முதல் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது?
எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு மின்சாரம், எத்தனை நாட்களுக்கு வாங்கப்படுகிறது? இதனால் ஏற்படும் மொத்தக் கூடுதல் செலவு எவ்வளவு? ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூயசக்தி என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் தவெக அரசு வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.
இந்தக் கூடுதல் செலவை எப்படியாயினும் நாளை மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப் போகிறீர்கள். ஆக, அரசின் திட்டமிடல் குறைபாட்டிற்காக எளிய மக்களும் விவசாயிகளும் சிறு தொழில்முனைவோரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டுமா? தனியார் மின் நிறுவனங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கா மக்கள் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்கள் என்ற என்னுடைய கேள்விகளுக்கு தவெக அரசிடம் என்ன பதில் உள்ளது?
ஆகவே, அரசின் மின் நிலையங்களைச் சீரமைத்தல், நிலுவைத் திட்டங்களை நிறைவேற்றுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் மாற்று மின் உற்பத்தி திட்டங்களையும், மின்சேமிப்பு வசதிகளையும் விரிவுபடுத்துதல், மின் விநியோக இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அதிக விலையிலான மின் கொள்முதல் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்து, தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதோடு, கூடுதல் கொள்முதல் செலவை மக்கள்மீது சுமத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.'' என நாதக சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman questions the TVK government regarding the purchase of electricity from the private sector