இரவு பகலாக உழைத்தும் பலனில்லை...! தேர்தல் முடிந்து 5 மாதங்களாகியும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் இல்லை...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகளில் இரவு, பகல் பாராமல் உழைத்த அரசு ஊழியர்களுக்கு, தேர்தல் முடிந்து 5 மாதங்களைக் கடந்தும் இதுவரை மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. வழக்கமாகத் தேர்தல் முடிவுகள் வெளியான சில மாதங்களுக்குள் வழங்கப்படும் தொகை இன்னும் கிடைக்காததால், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் உள்ள 234 தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்றது.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் பணியாற்றினர்.ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோல், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பணியாளர்களும் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர்.மேலும், தேர்தல் செலவுக் கணக்குகளைச் சரிபார்க்கும் பணியில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் பணியில் தமிழகக் காவலர்கள், சிறப்புக் காவல் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர், சிறைத் துறையினர், வனத் துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்படையினரும் பணியாற்றினர்.வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வது, வாக்குப்பதிவு மையங்களுக்குக் கொண்டு சேர்ப்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது உள்ளிட்ட பணிகளிலும் மண்டல அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இவ்வாறு அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டனர்.பொதுவாகத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படுவது வழக்கம். தலைமைத் தேர்தல் அலுவலரின் உத்தரவின் அடிப்படையில், இதற்கான நிதியை நிதித் துறை விடுவிக்கும்.

ஆனால், நடப்பாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் என ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. தற்போது ஆறாவது மாதமும் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இன்னும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, மதிப்பூதியத்துக்கான தொகை ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கான மதிப்பூதியத் தொகை மொத்தம் ரூ.300 கோடி முதல் ரூ.500 கோடி வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தொகையை வழங்குவதற்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், தலைமைத் தேர்தல் அலுவலரின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், நிதித் துறையிடமிருந்து உரிய நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் மதிப்பூதியம் வழங்குவதில் தாமதம் நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத்தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்நோக்க வேண்டிய சூழல் உள்ளது. இத்தகைய நிலையில், முந்தைய தேர்தல் பணிக்கான மதிப்பூதியமே இன்னும் வழங்கப்படாதது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது,"தேர்தல் பணிகளை அமைதியாகவும் சீராகவும் நடத்துவதற்காக அரசு ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்தனர். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு கட்டங்களில் கூடுதல் பொறுப்புகளுடன் பணியாற்றினோம்.

வழக்கமாகத் தேர்தல் முடிந்த சில நாட்கள் அல்லது மாதங்களுக்குள் மதிப்பூதியம் வழங்கப்பட்டுவிடும். இதுவரை அதுதான் நடைமுறையாக இருந்து வந்தது.ஆனால், இந்த முறை தேர்தல் முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் மதிப்பூதியம் கிடைக்கவில்லை.

இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, தாமதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிலுவையில் உள்ள மதிப்பூதியத்தை விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Working day and night to no avail Even after 5 months election government employees have not received their salaries


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->