வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - தமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
Low pressure area Bay of Bengal Heavy rainfall warning Tamil Nadu coastal districts
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வங்கக்கடல் மற்றும் தமிழக மழை நிலவரம் குறித்து முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் தெரிவித்திருப்பதாவது,"நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இலங்கை மட்டகளப்பிற்கு கிழக்கு–தென்கிழக்கே 170 கி.மீ,திரிகோணமலைக்கு கிழக்கு–தென்கிழக்கே 250 கி.மீ,ஹம்பாந்தோட்டைக்கு கிழக்கு–வடகிழக்கே 270 கி.மீ,காரைக்காலுக்கு தென்கிழக்கே 540 கி.மீ,சென்னைக்கு தெற்கு–தென்கிழக்கே 710 கி.மீ தொலைவில் மையம் கொண்டு உள்ளது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (ஜனவரி 10) மதியம் அல்லது மாலை நேரத்தில், திரிகோணமலை – யாழ்ப்பாணம் இடையே உள்ள வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
மழை முன்னறிவிப்பு
09-01-2026:
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 35–45 கி.மீ வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை,
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-01-2026:
கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில்,
உள் தமிழகத்தின் சில பகுதிகளில்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரும்.
பலத்த தரைக் காற்று 35–45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை,
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை 09-01-2026 முதல் 11-01-2026 வரை,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும் அல்லது இயல்பை விட சற்றுக் குறைவாகவும் இருக்கக்கூடும்.
சென்னை & புறநகர் வானிலை
இன்று:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 28°C, குறைந்தபட்சம் 24°C ஒட்டியிருக்கும்.
நாளை:
வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 27–28°C, குறைந்தபட்சம் 24°C ஆக இருக்கும்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
English Summary
Low pressure area Bay of Bengal Heavy rainfall warning Tamil Nadu coastal districts