வெயிலுக்கு டாட்டா...மழைக்கு வெல்கம்...! குடை ரெடியா மக்களே...? சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை...!
Goodbye sun Welcome rain your umbrellas ready people Thunder and lightning many districts including Chennai today
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இருந்து கடலோர கர்நாடகா வரை, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக சுமார் 3.1 கிலோமீட்டர் முதல் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நீட்சி நிலவி வருகிறது.
இடியுடன் மழைக்கு வாய்ப்பு
இதன் தாக்கத்தால் இன்று (11.06.2026) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழைப்பொழிவு ஏற்படக்கூடும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.

பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீரக்கூடும்.
நாளைய வானிலை நிலவரம்
நாளை (12.06.2026) தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும்.திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை படிப்படியாக குறையும்
11.06.2026 முதல் 14.06.2026 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக சரிவடையக்கூடும்.மேலும், இதே காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கான சிறப்பு முன்னறிவிப்பு
இன்று (11.06.2026) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸையும் ஒட்டிய அளவில் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது".
English Summary
Goodbye sun Welcome rain your umbrellas ready people Thunder and lightning many districts including Chennai today