எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் முடிவு நியாயமானது..நாங்கள் வரவேற்கிறோம்! திருமாவளவன் - Seithipunal
Seithipunal


தமிழக அரசு சார்பில் எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

தமிழக அரசின் நிதிநிலை குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு தற்போது கார் வழங்குவது தேவையா என்ற விவாதமும் எழுந்துள்ளது. இதனிடையே, திமுக, பாமக மற்றும் சில கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அரசு வழங்கும் காரை பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவதை விசிக வரவேற்கிறது. விருப்பம் இல்லாதவர்கள் வாங்க மறுப்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். கார் வழங்கும் அரசின் முடிவு நியாயமானது” என தெரிவித்தார்.

மேலும், தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்க முன்வந்திருப்பதாகவும், அதனை தாங்கள் வரவேற்பதாகவும் திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து, விஜய் தலைமையிலான அரசுக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி ஏற்படுத்தக் கூடாது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்திருந்த கருத்தையும் திருமாவளவன் குறிப்பிட்டார். “தலைமைச் செயலாளர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடாது என சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதை முதலமைச்சர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

திமுகவில் பொறுப்புகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய திருமாவளவன், விசிகவிலும் இதேபோன்று வயது வரம்பை அடிப்படையாகக் கொண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், “விஜய்யின் தவெக அரசு 100 நாட்களில் பொதுமக்களிடையே எந்தவித தவறான பெயரையும் எடுக்கவில்லை” எனவும் திருமாவளவன் கூறினார்.

விசிக குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், உளுந்தூர்பேட்டை மாநாட்டின் மூலம் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “விஜய்யின் வருகைக்குப் பிறகு விசிக கரைந்துவிட்டது என்று மூன்று மாதங்களாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களின் முகத்தில் உளுந்தூர்பேட்டை மாநாடு மூலம் கரி பூசப்பட்டுள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The decision to provide cars to MLAs is justified we welcome it Thirumavalavan


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->