27-ந் தேதி வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை ; மீனவர்களுக்கு கடலோர காவல்படை முக்கிய அறிவிப்பு..!
Coast Guard issues important announcement to fishermen due to storm warning on the 27th
நாளை மறுநாள் 27-ந் தேதி தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதியில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் என கடலோர காவல் படை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
'வங்காள விரிகுடாவில் மோசமான வானிலை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, 25-ந் தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 26-ந் தேதி (நாளை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

27-ந் தேதி தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதியில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, கடல் பயணிகள் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடலோர காவல்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்து வருகின்றன.
மேலும், மீன்பிடி படகுகள் பாதுகாப்புக்காக அருகிலுள்ள துறைமுகத்திற்கு விரைவில் திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 985 மீன்பிடி படகுகளை அருகிலுள்ள துறைமுகங்களுக்கு கடலோர காவல்படை அனுப்பி வைத்துள்ளது.' என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Coast Guard issues important announcement to fishermen due to storm warning on the 27th