தமிழகத்தில் நாளை முதல் வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகரிக்கும்: தென் தமிழக கடலோரப் பகுதிகள் சூறாவளி வீசக்கூடும்..!
Chennai Meteorological Department has announced that the temperature will increase above normal in Tamil Nadu from tomorrow
தமிழகத்தில் நாளை முதல் 28-ஆம் தேதி வரையில் ஒருசில மாவட்டங்களில் வழக்கத்தை விட 05 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது என்றும் அறிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 25) முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், 26 முதல் 28-ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் வெப்பநிலையானது வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக உயரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 05 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தலா 04 செமீ, விருதுநகர், மதுரை மாவட்டம் சாத்தியார், கல்லந்திரி, சிட்டம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 03 செமீ, சிவங்கை மாவட்டம் தேவகோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்டதானம், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல், ஆயிங்குடி, நீலகிரி மாவட்டம் மேல் கூடலூரில் தலா 02 செமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Chennai Meteorological Department has announced that the temperature will increase above normal in Tamil Nadu from tomorrow