தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
Chennai IMD Report 23 aug 2025
தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஓரிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரத்தை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி, தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகமாக உள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34° செல்சியஸ் வரை இருக்கும் நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27° செல்சியஸ் வரை குறையக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதனுடன், மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி, வடக்கு வங்கக்கடலின் பல பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வானிலை மாற்றங்கள் காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், மீனவர்கள் பாதுகாப்புக்காக கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Chennai IMD Report 23 aug 2025