வாட்ஸ்அப் அழைப்புகள் அரசின் கண்காணிப்பிலா...? வைரல் தகவலுக்கு PIB முற்றுப்புள்ளி...!
Are WhatsApp calls under government surveillance PIB puts end viral rumour
தொழில்நுட்ப வளர்ச்சியுடன், ஸ்மார்ட்போன் பயனர்களிடையே வாட்ஸ்அப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்புகள் தொடர்பாக மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

அந்த தகவலில்,வாட்ஸ்அப்பில் செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும்,வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் அரசின் கண்காணிப்பில் இருக்கும்,ஒவ்வொருவரின் செல்போன் எண்களும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைக்கப்படும்,அரசையோ, பிரதமரையோ விமர்சிக்கும் வீடியோ அல்லது தகவல்களை பகிர்ந்தால் போலீஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல், பயனர்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) தகவல் சரிபார்ப்பு பிரிவு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “இந்த தகவல் முற்றிலும் தவறானது. வாட்ஸ்அப் தொடர்பாக மத்திய அரசு இதுபோன்ற எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடவில்லை”என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அதே நேரத்தில், பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும், வைரலாக பரவும் செய்திகளை அதிகாரப்பூர்வ அரசு மூலங்களின் மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Are WhatsApp calls under government surveillance PIB puts end viral rumour