தவெகவுக்கு செல்லும் இளைஞர் வாக்குகள்..திமுக மாஸ்டர் பிளான்! அதற்காக தான் லேப்டாப்பா? அமைச்சர் சக்கரபாணி சொன்ன பதில்!
Youth votes going to Tvk DMK master plan Is that what the laptop is for Minister Chakrabarni answer
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும்; அதற்குப் பிறகு பார்க்கலாம்” என்று விமர்சனமாகவும் கருத்து தெரிவித்தார்.
சென்னையில் இருந்து காணொளி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘உங்கள் கையில் உலகம்’ திட்டத்தின் கீழ் 10 லட்சம் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் எம்விஎம் அரசு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அர. சக்கரபாணி மற்றும் பழனி எம்.எல்.ஏ ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி,“முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 2,321 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ‘புதுமைப்பெண்’, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கின்றன. பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகிறார்கள்” என்றார்.
மேலும், முதலமைச்சர் காணொளி உரையில்,“மாணவர்கள் மடிக்கணினி மூலம் முன்னேற வேண்டும்; அதேபோல் நானும் தேர்தலில் வெற்றி பெற்று, மாணவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்” என்று பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தேர்தல் நெருங்குவதால்தான் மடிக்கணினி, பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது” என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர்,“2021 கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஒரு குடும்பத்திற்கு ₹5,000 வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெறும் ₹1,000 மட்டுமே வழங்கினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு வழங்கினோம். கடந்த ஆண்டு மட்டும் வழங்க முடியவில்லை. அதற்கும் சேர்த்து இந்த ஆண்டு ₹3,000 வழங்குகிறோம். கூடுதலாக அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகின்றன” என்று விளக்கினார்.
மேலும்,“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். குழந்தைகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் முக்கியத்துவம் அளித்து திராவிட அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.
விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு இருப்பதால், வாக்காளர்களாக மாற உள்ள மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு,“யாராக இருந்தாலும் தேர்தலை சந்திக்கட்டும். பேரறிஞர் அண்ணா, கலைஞர், மு.க. ஸ்டாலின் என 75 ஆண்டுகளாக பல தியாகங்களுடன் திமுக ஆட்சி நடத்தி வந்துள்ளது. அவர்களும் மக்களை சந்திக்கட்டும். மக்கள் தீர்ப்பு வரட்டும். எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுவார். ஏழாவது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் திராவிட அரசு கூட்டணி வெற்றி பெறும்” என்று அமைச்சர் சக்கரபாணி உறுதியாக தெரிவித்தார்.
English Summary
Youth votes going to Tvk DMK master plan Is that what the laptop is for Minister Chakrabarni answer