தஞ்சாவூரில் திருமாவளவன் பதாகையை அகற்றியதால் ஆத்திரம்; மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட விசிகவினர்; காவல் அதிகாரியை கன்னத்தில் அறைந்த இளைஞர்..!
Youth arrested for attacking police officer when VK members staged a protest after Thirumavalavan banner was removed in Thanjavur
தஞ்சாவூரில் தொல்.திருமாவளவனின் பதாகை அகற்றப்பட்டதால் அதிருப்தியடைந்த விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் எஸ்ஐ ஒருவரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் ரயிலடியில் அக்கட்சியினர் பதாகை வைத்திருந்தனர். ஆனால், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பதாகையை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் கூச்சலிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ரயிலடி சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி, அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், வழிவிடுமாறு கூறியதால், அவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை சமாதானப்படுத்த வந்த போலீஸாருக்கும் இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, இளைஞரை காவல் எஸ்ஐ அப்துல் ரஹீம் தாக்கியதால், பதிலுக்கு அப்துல் ரஹீமை இளைஞரும் சரமாரியாக தாக்கியுள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த இளைஞரை மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
English Summary
Youth arrested for attacking police officer when VK members staged a protest after Thirumavalavan banner was removed in Thanjavur