திண்டுக்கல்லில் பயங்கரம்...! மகளை கேலி செய்த வாலிபர் அடித்துக் கொலை...! - குடிநீர் தொட்டியில் உடல் மீட்பு
young man who mocked his daughter beaten death Body recovered from drinking water tank
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் மகளை கேலி செய்ததாக ஏற்பட்ட ஆத்திரத்தில் வாலிபரை கொலை செய்து, அவரது உடலை குடிநீர் தொட்டியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.செம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜின் மகன் சங்கிலி முருகன் (38). கடந்த 10-ந்தேதி முதல் சங்கிலி முருகனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சங்கிலி முருகன் எங்கு சென்றார்? அவருக்கு என்ன நேர்ந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதன் ஒரு பகுதியாக அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வேறு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான அதிர்ச்சி தகவல் காவலர்களுக்கு கிடைத்தது.இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கிலி முருகனை காரில் அழைத்துச் சென்ற சிலர், திண்டுக்கல் சாலையில் வைத்து கொலை செய்துவிட்டு, அவரது உடலை மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடிநீர் தொட்டியில் வீசியிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக அதே பகுதியைச் சேர்ந்த பாக்கிய செல்வம், முருகன், மருதுபாண்டி ஆகிய 3 பேரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குடிநீர் தொட்டியில் இருந்து சங்கிலி முருகனின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
தொடர்ந்து காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், இந்த கொலைக்கான பின்னணி குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. பாக்கிய செல்வத்தின் மகளை சங்கிலி முருகன் கேலி செய்ததாகவும், இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் நாளடைவில் கடும் பகையாக மாறிய நிலையில், சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகளை கேலி செய்ததாக கூறி வாலிபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குடிநீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் செம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young man who mocked his daughter beaten death Body recovered from drinking water tank