வாக்காளர் பட்டியலில் தவறான தகவல்: 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டம்!2026ல் ஓட்டுபோட முடியாது?
Wrong information in voter list Election Commission plans to send notices to 1 million people Wonot be able to vote in 2026
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த இந்த பணிகளின் போது, தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இந்த சிறப்பு திருத்த நடவடிக்கையின் போது, இறந்தவர்கள், இரண்டு இடங்களில் பெயர் பதிவு செய்யப்பட்டவர்கள், அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர்கள் மற்றும் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்த நிலையில், பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் தினசரி முகாம்களும், மற்ற மாவட்டங்களில் வார இறுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. SIR படிவங்களை நிரப்பும்போது சரியான விவரங்களை வழங்காத சுமார் 10 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, 2002 அல்லது 2005ஆம் ஆண்டுகளில் தங்களது பெயர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததா என்பது தொடர்பான விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும் என தேர்தல் ஆணையம் முன்பே அறிவுறுத்தியிருந்தது. ஆனால் பலர் அந்த தகவல்களை சேர்க்காமல் படிவங்களை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சிலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு மீண்டும் தங்களை உண்மையான வாக்காளர்கள் என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மூலம் தபால் வழியாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. நோட்டீஸ் பெறும் வாக்காளர்கள், 13 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து தங்களது அடையாளத்தை உறுதி செய்யலாம். இதில் பிறந்த ஊர் சான்றிதழ், நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் அடங்கும்.
வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தமிழக அரசும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் விரைவாக கிடைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் காரணமாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், SIR படிவத்திற்குத் தேவையான சான்றிதழ்கள் கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், வாக்காளர் பட்டியலில் தவறுதலாக பெயர் நீக்கப்பட்டவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. நோட்டீஸ் கிடைத்தவுடன் அதை புறக்கணிக்காமல், தேவையான ஆவணங்களை உடனடியாக சமர்ப்பித்து விளக்கம் அளித்தால் போதும். தவறினால், எதிர்காலத்தில் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் வாக்காளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Wrong information in voter list Election Commission plans to send notices to 1 million people Wonot be able to vote in 2026