பணம் கொடுத்தா தான் வேலை நடக்கும்...! ரசாயனம் தடவிய நோட்டுகள்...! - விவசாயி விரித்த வலையில் கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலர்...! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை லஞ்சமாக பெற்ற ஊராட்சி செயலர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பூம்பாறையை சேர்ந்த விவசாயி ராஜா, தனது தந்தையின் பெயரில் இருந்த சொத்து வரியை தனது பெயருக்கு மாற்றுவதற்காக பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, பெயர் மாற்றம் செய்வதற்கு ஊராட்சி செயலர் முருகேசன் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வளவு பணத்தை தன்னால் கொடுக்க முடியாது என்று ராஜா கூறியுள்ளார். ஆனால், பணம் கொடுத்தால்தான் பணியை செய்து தர முடியும் என்று கூறிய ஊராட்சி செயலர், பின்னர் தொகையை ரூ.4 ஆயிரமாக குறைத்ததாக கூறப்படுகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா, இதுதொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவலர்களிடம் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், ஊராட்சி செயலரை லஞ்ச பணத்துடன் பிடிக்க திட்டமிட்டனர்.இதற்காக ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை ராஜாவிடம் கொடுத்து, அந்த தொகையை ஊராட்சி செயலரிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். இதன்படி, நேற்று முன்தினம் ராஜா பூம்பாறை ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றார்.

ராஜா அலுவலகத்துக்குள் சென்ற நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்பு காவலர்கள் அலுவலகத்துக்கு வெளியே மறைந்திருந்து தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது ஊராட்சி செயலர் முருகேசன் மற்றும் தற்காலிக கணினி இயக்குபவர் ராஜா சண்முகம் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை ராஜா வழங்கினார்.

பணத்தை பெற்றுக்கொண்டதை உறுதி செய்ததும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள் அதிரடியாக உள்ளே சென்று முருகேசன் மற்றும் ராஜா சண்முகம் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூம்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Work will only be done if you pay Chemical coated notes Panchayat secretary caught red handed net spread by farmer


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->