சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பெண்களுக்கு தளர்வு வேண்டும்..திமுக மகளிரணி வலியுறுத்தல்!
Women should be given relaxation in the sub-inspector examination DMK womens wing insists
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பெண்களுக்கு தளர்வு வேண்டி திமுக மகளிரணி காவல்துறை தலைமையகத்துக்கு கோரிக்கை மனு அளித்தனர்!
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் எங்களது மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறையில் பெண்களின் பங்கு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்ல. நமது சமூகத்தில் நீதி, நேர்மை மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதும் ஆகும். கடந்த 15 ஆண்டுகளில், ஒன்றிய அரசின் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள், டிஜிபி, கண்காணிப்பாளர்கள் மற்றும் மூத்த கண்காணிப்பாளர்களாக புதுச்சேரி காவல் படையில் சிறப்பாக தலைமை தாங்கிச் செயல்படுவதைக் கண்டிருக்கிறோம். அதைப்போலவே புதுச்சேரியின் பெண்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதை அடிப்படையாக கொண்டு, புதுச்சேரி மாநில மகளிரணி சார்பில் காவல்துறையில் பெண்களுக்கு நியாமான தளர்வுகளை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை டிஜிபி ஷாலினி சிங் அறிவுறுத்தலின் பேரில்,காவல் தலைமையகத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர், அணில் குமார் லால் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அதில், புதுச்சேரி காவல் துறையில் பெண்கள் பதவி உயர்வு பெற்று முன்னேறுவது மிகவும் அரிது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். ஆண் காவல் அதிகாரிகளைப் போலல்லாமல், இன்று துறையில் சாதித்து தனித்து நிற்கும் ஒரு பெண் கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் உதவி ஆய்வாளர் தகுதித் தேர்வில் பெண்கள் எதிர்கொள்வதில் தடைகள் உள்ளது. கடுமையான உடல் தகுதித் தேர்வு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு இருந்தபோதிலும், அவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இதை நிவர்த்தி செய்யும் வகையில், 2022 ஆம் ஆண்டில், சப்-இன்ஸ்பெக்டர் தகுதித் தேர்வில் பெண்களுக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட சிறப்பு தளர்வுகளை வழங்க டிஜிபி உத்தரவு பிறப்பித்திருந்தார். இருப்பினும், 16.06.2025 தேதியிட்ட உத்தரவின்படி, வரவிருக்கும் போட்டித் தேர்வுக்கு இந்த தளர்வுகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது காவல் படையில் இருந்து பெண்களை வேண்டுமென்றே விலக்கி வைக்க முயற்சிப்பதை போலத் தெரிகிறது. புதுச்சேரியில், முதலில் உடல் தகுதித் தேர்வையும், பின்னர் தகுதி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வையும் நடத்தும் நடைமுறை அமல்படுத்த வேண்டும். தற்போதுள்ள நடைமுறை, உடல் தகுதித் தேர்வின் போது பல திறமையான பெண்கள் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்கள் முதலில் எழுத்துத் தேர்வையும், அதைத் தொடர்ந்து மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு உடல் தகுதித் தேர்வையும் நடத்துகின்றன. இது எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற போட்டியாளர்கள், உடல் தேர்வுக்கு போதுமான அளவு பயிற்சிகள் மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.
எனவே, பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய, 2022 உத்தரவின்படி உடல் தகுதி தேர்வில் சிறப்பு தளர்வுகளை வழங்குவது அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள், அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான அணுகுமுறையினால் பாலின சமத்துவம் காவல்துறையில் ஏற்படாது. இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பாலின சமத்துவத்திற்கு முரணானது. ஆதலால், நியாயமான முறையில், 33% பெண்கள் காவல் உதவி ஆய்வாளராக நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மனு அளித்திருந்தோம்.புதுச்சேரிமாநில மகளிரணி அமைப்பாளர்காயத்ரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Women should be given relaxation in the sub-inspector examination DMK womens wing insists