வரலாற்றுச் சின்னத்தை இடித்தது ஏன்...? பெரியார் தோரண வாயிலை தரைமட்டமாக்கிய மாநகராட்சி... கொந்தளிக்கும் தமிழ் ஆர்வலர்கள்...! - Seithipunal
Seithipunal


 தமிழ் மொழியின் பெருமையை உலக அரங்கில் எடுத்துரைத்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையின் அடையாளங்களாக விளங்கிய தோரண நுழைவாயில்கள், தற்போது நகர வளர்ச்சி மற்றும் போக்குவரத்து விரிவாக்கத் திட்டங்களுக்காக ஒன்றன்பின் ஒன்றாக அகற்றப்பட்டு வருகின்றன.

இதனால், மீதமுள்ள வரலாற்றுச் சின்னங்களின் எதிர்காலம் குறித்த கேள்வி பொதுமக்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைமிக்க மதுரையில், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி மாநகரின் முக்கிய நுழைவுப் பகுதிகளான மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம் மற்றும் பசுமலை ஆகிய இடங்களில் பிரமாண்ட தோரண நுழைவாயில்கள் அமைக்கப்பட்டன.

தமிழ் பண்பாடு, வரலாறு மற்றும் மாநாட்டின் நினைவுச் சின்னங்களாக அவை பல ஆண்டுகளாக மதுரையின் அடையாளங்களாக விளங்கி வந்தன.காலப்போக்கில் மாநகரின் மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்ததைத் தொடர்ந்து, முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், மாட்டுத்தாவணி மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் அமைந்திருந்த தோரண நுழைவாயில்கள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாகக் கூறி அவற்றை அகற்றக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாட்டுத்தாவணியில் அமைந்திருந்த நக்கீரர் தோரண வாயிலும், கே.கே.நகரில் அமைந்திருந்த பெரியார் தோரண வாயிலும் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதே நேரத்தில், நகரின் போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையெனில் புதிய தோரண நுழைவாயில்களை வேறு வடிவமைப்பில் அமைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவுறுத்தியது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி மாட்டுத்தாவணி சாலையின் நடுப்பகுதியில் அமைந்திருந்த நக்கீரர் தோரண வாயில் இடித்து அகற்றப்பட்டது.

அந்தப் பணியின்போது எதிர்பாராத விதமாக தோரணத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் பொக்லைன் இயந்திர ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவின்படி நேற்று இரவு கே.கே.நகர் பகுதியில் அமைந்திருந்த பெரியார் தோரண நுழைவாயிலையும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன், பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட நிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.முந்தைய விபத்து மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக விரிவான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பணிகள் நடைபெறும் பகுதி முழுவதும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

காவலர்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் முன்னிலையில் பெரியார் தோரண நுழைவாயில் பாதுகாப்பாக இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.இதன் மூலம் உலகத் தமிழ் மாநாட்டின் நினைவுச் சின்னங்களாக விளங்கிய நக்கீரர் மற்றும் பெரியார் தோரண வாயில்கள் வரலாற்றுப் பதிவாக மாறியுள்ளன.

இதையடுத்து, தற்போது வில்லாபுரம் மற்றும் பசுமலை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படும் மற்ற இரு தோரண நுழைவாயில்களும் அகற்றப்படுமா? அல்லது அவற்றின் வரலாற்றுப் பெருமையை பாதுகாத்தபடி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய வடிவமைப்பில் மாற்றியமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மதுரை மக்களிடையே அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why historical monument demolished corporation that razed Periyar Thorana Gate Tamil activists furious


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->