யார் ரூட் தல?- இன்ஸ்டா போட்டி ரெயிலில் ரணகளமாக மாறியது...! கல்லூரி மாணவர்கள் மோதல்-நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


சென்னை கடற்கரை–செங்கல்பட்டு மின்சார ரெயில் பாதையில் பயணிக்கும் சில கல்லூரி மாணவர்கள் இணைந்து ‘பல்லாவரம் ரூட் தல’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை நடத்தி வருகின்றனர். இந்த கணக்கை மையமாக வைத்து, பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கிடையே “யார் உண்மையான ரூட் தல?” என்ற போட்டி நீண்ட நாட்களாகவே மோதலாக மாறி வந்தது.

இந்நிலையில், கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பயணம் செய்த பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கிடையே மீண்டும் அதே ரூட் தல விவகாரம் வெடித்தது. ரெயில் குரோம்பேட்டை நிலையத்தை அடைந்ததும், இரு தரப்பினரும் கீழே இறங்கி கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு விரைவில் கைகலப்பாக மாற, நந்தனம் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.இந்த தாக்குதலில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆகாஷ் (18) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தனம் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்களை கைது செய்தனர்.இதேபோல், சென்னையில் உள்ள பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரிகளில் படிக்கும் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, அனுப்பம்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் மின்சார ரெயிலில் பயணிக்கும் போது ரூட் தல பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதிக்கொள்வது தொடர்கதையாக உள்ளது.

முன்னதாக, அனுப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவரான சச்சினை கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவர் தினமும் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரெயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ததை கண்ட சச்சின், தன்னை கைது செய்ததற்கு இவர்களே காரணம் என கூறி மூன்று மாணவர்களை தாக்கியுள்ளார்.

அதற்கு பதிலாக அவர்களும் தாக்கியதால் ரெயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது; பயணிகள் அச்சமடைந்தனர்.இதையடுத்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மோதலில் ஈடுபட்ட மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இந்த வழக்கில் சச்சின் உள்ளிட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் பாஸ்கர், மோகன்ராஜ், குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who Root Thala Insta challenge turned chaotic train Clash between college students What happened


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->