பணத்தை வாங்கும்போது இருந்த வேகம் எங்க போச்சு...? நீட் தேர்வு கட்டணத்தைத் திருப்பித் தருவதில் இழுபறி...! - மாணவர்கள் தவிப்பு...!
Where speed collecting money gone Delay refunding NEET exam fees Students distress
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 2026 கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும், மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், நேற்று முதல் தேர்வுக் கட்டணத்தை திருப்பி வழங்கும் இணைய நடைமுறை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், இதுவரை அதற்கான இணைய இணைப்பை தேசிய தேர்வு முகமை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.
இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பணம் திரும்ப கிடைக்கும் நடைமுறையை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.தேர்வுக்கான கட்டண விவரங்களின்படி, பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.1700, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1600, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற ஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.1000, வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் ரூ.9500 வரை கட்டணமாக செலுத்தியிருந்தனர்.தற்போது, கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான இணைய இணைப்பு விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த இணைய வசதி செயல்பாட்டுக்கு வந்தவுடன், மாணவர்கள் குறிப்பிட்ட சில நடைமுறைகளை பின்பற்றி தங்களது பணத்தை திரும்பக் கோர முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்படும் பணம் திரும்பப் பெறும் இணைப்பை தேர்வு செய்து, விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் மூலம் மாணவர்கள் உள்நுழைய வேண்டும்.பின்னர், வங்கி கணக்கு விவரங்களை சரியாக பதிவிட்டு, IFSC குறியீடு மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை சரிபார்த்த பின், பணம் திரும்பப் பெறும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவானதற்கான ஆதாரமாக அந்த உறுதிப்படுத்தல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Where speed collecting money gone Delay refunding NEET exam fees Students distress