இனி காலி பாட்டில் எடுக்க மாட்டோம்...! டாஸ்மாக் வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்திய வியாபாரிகளின் புது அறிவிப்பு...!
We no longer take empty bottles New announcement by traders that worried TASMAC customer
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், 3 பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் சிவகுமார் மற்றும் இணை செயலாளர் கந்தவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இருந்து காலி மதுபாட்டில்களை சேகரித்து, அவற்றை சுத்தம் செய்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பும் தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றன.

ஆனால், வாகன வாடகை, குடோன் வாடகை உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான குழப்பங்களும் ஏற்பட்டுள்ளதால் இந்தத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளும், அவர்களை நம்பியுள்ள குடும்பங்களும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, காலி மதுபாட்டில்கள் தொடர்பான சரக்கு மற்றும் சேவை வரியை வியாபாரிகள் மீது சுமத்தாமல், மதுபான ஆலை உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், வியாபாரிகள் மீது விதிக்கப்படும் அபராத நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
எங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், மதுபான ஆலை உரிமையாளர்கள் மற்றும் காலி பாட்டில் வியாபாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
எங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மதுபாட்டில்களை வாங்குவது, அவற்றை சுத்தம் செய்வது மற்றும் மதுபான ஆலைகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
English Summary
We no longer take empty bottles New announcement by traders that worried TASMAC customer