ஆங்கிலேயருக்கு எதிராக, கப்பல் வாங்கி, வரலாற்று புகழ் பெற்ற சிதம்பரனார்…!
ஆங்கிலேயருக்கு எதிராக, கப்பல் வாங்கி, வரலாற்று புகழ் பெற்ற சிதம்பரனார்…!
ஆங்கிலேயருக்கு எதிராக, கப்பல் வாங்கி, வரலாற்று புகழ் பெற்ற சிதம்பரனார்…!
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், கப்பலில் பயணிப்பது என்றால், அது ஆங்கிலேயரின் கப்பலில் தான் முடியும். அதிகாரமும், பண பலமும் அவர்களிடம் மட்டும் தான் இருந்தது. அதனால், துாத்துக்குடியிலிருந்து வியாபார நோக்கத்துடன் கொழும்பு செல்பவர்களுக்கு, ஆங்கிலேயரின் கப்பல் தான் சௌகர்யமாக இருந்தது.
ஆங்கிலேயரை எதிர்ப்பதை தன் வாழ் நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்த, வ.உ.சி. அப்போது, துாத்துக்குடியில் பிரபல வக்கீலாக இருந்தார். அப்போது தான், ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் வாங்கி விட வேண்டும், அதில் இந்தியர்களுக்கு சலுகையுடன் பயன் அளிக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஆனால், அது அவ்வளவு சுலபமானதாகத் தோன்றவில்லை, துவக்கத்தில்!
கப்பல் வாங்குவதற்கு, அந்தக் காலத்திலேயே, பத்து லட்ச ரூபாய் முதலீடு தேவைப் பட்டது. வருவது வரட்டும், என்று, 1882 – இந்தியக் கம்பெனிகளின் சட்டப்படி, 1906-ஆம் ஆண்டு, அக்டோபர் 16-ல் புதிய கப்பல் வாங்க பதிவு செய்யப் பட்டது.
இதற்கான தொகையை, பங்குதாரர்களிடம் இருந்து சேகரித்து விடலாம், என்பது தான், திட்டம். இந்த திட்டத்திற்கான தலைவராக, நான்காம் தமிழ் சங்கத்தை, மதுரையில் நிறுவிய, பாண்டித்துரைத் தேவர் நியமிக்கப் பட்டார். வ.உ.சி. செயலாளராக இருந்தார். அதிக அளவில் ஆட்கள் பங்குதாரர்களாக சேர்க்கப் பட்டனர்.
ஜனாப் ஷாஜி முகம்மது பக்கீர் சேட், என்பவர் மட்டும், 8000 பங்குகளை வாங்கினார். அந்தப் பங்கின் மொத்த தொகை 2 லட்ச ரூபாய். அதுவே, தொடக்க மூலதனமாக இருந்தது.
இந்தக் கப்பல் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக, வ.உ.சி. தன் வழக்கறிஞர் தொழிலை விட வேண்டியிருந்தது. 1907-ஆம் ஆண்டு, கப்பல் துாத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு இயக்கப் பட்டது.
ஆங்கிலேயரின் கப்பலை விட, குறைந்த கட்டணத்தில், ஆங்கிலேயர் அல்லாது, இந்தியர்களை மட்டும், ஏற்றிக் கொள்ளும் கொள்கையுடன், துவக்கப்பட்ட இந்தக் கப்பலில், எண்ணற்றோர் பயணம் செய்யத் துவங்கினர். இதனால், ஆங்கிலேயரின் கப்பல் காலியாக செல்ல வேண்டி இருந்தது.
தங்களது வியாபாரத்தில் குறுக்கிட்ட, வ.உ.சி-யின் மீது, தேச துரோக குற்றம் சுமத்தி, 1908- ஜுலை 8 –ஆம் தேதி, இவருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, கோவை சிறையில் அடைத்தனர்.
அங்கு நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், மாட்டிற்குப் பதிலாக மரச் செக்கினை இழுக்க வைத்தான் வெள்ளையன். இன்றும், அந்தச் செக்கு கோவை மத்திய சிறையில், பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.
அந்த செக்குக்கு மட்டும் வாய் இருந்தால், சிதம்பரனார் பட்ட துன்பத்தைப் பற்றி ஆயிரம் கதைகள் சொல்லும்!
மதுரை ராஜா -