விநாயகர் சதுர்த்தி: 80 ஆயிரம் சிலைகளுக்கு அனுமதி!
Vinayagar Chaturthi Permission for 80,000 idols
தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினரும், குடியிருப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் செய்துள்ளனர்.
நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி,சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட 1,519 விநாயகர் சிலைகள் இந்த ஆண்டும் அதே இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். சில இந்து அமைப்புகள் கூடுதலாக சிலைகள் வைக்க அனுமதி கேட்டும் போலீசார் அதற்கு மறுத்துவிட்டனர்.
அதன்படி, நாளை மறுநாள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருக்கின்றன.
சிலையை வைப்பவர்கள் விழா கமிட்டி அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நிர்வாகிகளை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு 27-ந் தேதி வைக்கப்படும் சிலைகள் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பூஜை செய்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 31-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக சிலைகளை வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினரும், குடியிருப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் செய்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
English Summary
Vinayagar Chaturthi Permission for 80,000 idols