"கரூர் பேரழிவுக்குப் பிறகும் விஜய் மவுனம் – ‘நல்ல டான்ஸ் ஆடுவார் என்பதற்காக முதல்வரா?’ – பத்திரிகையாளர் செந்தில் வேல் கடும் விமர்சனம்" - Seithipunal
Seithipunal


கரூர் விபத்தில் 41 பேர் உயிரிழந்த துயரநிலையிலும் நடிகர் விஜய் இதுவரை வீட்டு வாசல் தாண்டாமல் மவுனமாக இருப்பது பலரிடமும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் செந்தில் வேல் கடும் விமர்சனக் குரல் எழுப்பியுள்ளார்.

ஒரு யூடியூப் சேனலுக்குக் கொடுத்த பிரத்யேக பேட்டியில் செந்தில் வேல், விஜய்யின் அரசியல் மவுனம், அதிமுக–பாஜக கூட்டணியுடனான அவரின் தொடர்பு, மற்றும் அவரது கட்சி நடவடிக்கைகள் குறித்து நேரடியாக பேசியுள்ளார்.

திமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் விஜய்யை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியதற்கு பதிலளித்த செந்தில் வேல், “விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமியால் எதிர்க்கட்சித் தலைவராக கூட நிற்க முடியாது. அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இல்லை. அதனால் தான் ‘தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்” என்று சாடினார்.

மேலும் அவர் கூறியதாவது —“இன்று தேதிப்படி அதிமுகவை விட பெரிய கட்சி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான். கரூர் பேரழிவில் 41 பேர் உயிரிழந்தும் விஜய் களத்தில் போகவில்லை. மக்களை நேரில் சந்திக்கவில்லை. இது ஒரு தலைவருக்குச் சிகப்புக் குறி. அச்சத்தால், பயத்தால் அவர் இன்னும் வெளியே வரவில்லை.”

விஜய் பாஜக–அதிமுக கூட்டணியில் சேரலாம் என்ற பேச்சு குறித்து அவர்,“இப்படி 41 பேர் இறந்த பின்பும் அவர் கூட்டணியில் சேர நினைத்தால் அது அவருக்கே பெரிய அவமானம். எடப்பாடி பழனிசாமி பிள்ளையார் சுழி போட்டாச்சு, ஆனால் விஜய் ஏன் இதற்கு மறுப்பு சொல்லவில்லை? இந்த மவுனம் அச்சத்தின் வெளிப்பாடு” என்று விமர்சித்தார்.

அதே சமயம் நடிகர் அஜித் குமாரையும் அவர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.“ஒரு தேர்தல் நேரத்தில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணையப்போகிறார்கள் என்ற செய்தி வந்தவுடன், அஜித் உடனே ‘என் ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது, யாரும் எனது பெயரில் சேர வேண்டாம்’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். இந்தத் தெளிவு ஏன் விஜய்க்கில்லை?” என்றார்.

ரஜினிகாந்தின் உதாரணத்தையும் அவர் நினைவூட்டினார்.“திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசப் பார்க்கிறார்கள், எனக்கும் பூசப்பார்க்கிறார்கள், நானும் சிக்க மாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்டார் என்று ரஜினி கூறியிருந்தார். ஆனால் விஜய் இப்படி ஒரு கிளாரிட்டியோ, தைரியமோ காட்டவில்லை. இது அவரின் மவுனம் அல்ல, அச்சத்தின் வெளிப்பாடு” என்று செந்தில் வேல் குற்றம்சாட்டினார்.

மேலும் கடுமையாகக் கூறிய அவர்,“நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பதற்காக ஒருவரை முதல்வர் ஆக்க முடியுமா? அப்படி என்றால் பிரபுதேவா முதல்வராக இருக்க வேண்டும். நல்லா காமெடி பண்ணுவார் என்பதற்காக வடிவேல் முதல்வராக இருக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பி பேட்டியை முடித்தார்.

கரூர் பேரழிவு, விஜயின் மவுனம், மற்றும் அவரின் அரசியல் நோக்கம் குறித்து எழுந்த இந்த கடும் விமர்சனங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay remains silent even after the Karur disaster Is he the Chief Minister because he can dance well Journalist Senthil Vel harshly criticizes


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->