உறுதியான கட்டுமானம்.. மூன்று பக்கங்களிலும் நீர்.. அழகிய காட்சி.!
vellore fort
வேலூர் கோட்டை :
வேலூரில் இருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து ஏறத்தாழ 138கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து ஏறத்தாழ 69கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இக்கோட்டை ஒரு வரலாற்று சின்னமாக மட்டுமல்லாமல் நகரின் அடையாளமாகவும் வீற்றிருக்கிறது.
பல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் அமைப்பாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது.
தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர் நகரம் திராவிட நாகரீகத்தின் உன்னதமான வரலாற்று பெருமை மற்றும் செழிப்பான பாரம்பரியம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

வேலூர் நகரம் பல முக்கியமான சுற்றுலா அம்சங்களை பயணிகளுக்காக அளிக்கிறது.
கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது.
ஒரே ஒரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை ஏறத்தாழ 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் இக்கோட்டையை சுற்றிலும் அகழி அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது.

இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது.
இந்திய தொல்லியல் துறையில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கீழ் இந்த கோட்டை பாதுகாக்கப்படுகிறது.
தேசிய வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சுற்றுலா அம்சமாக இந்த வேலூர் கோட்டை வீற்றிருக்கிறது.

வேலூர் அருங்காட்சியகமானது கற்கால வரலாறு, மானுடவியல், தாவரவியல், கலை, தொல்லியல் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களை காட்சிக்கு வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம் எனும் நினைவுச்சின்னம் போன்றவை வேலூரில் பார்க்க வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.