கேஸ் சிலிண்டர்களுடன் தலைகுப்புற கவிழ்ந்த வண்டி...! நூலிழையில் தப்பிய விபரீதம்...! - ஸ்தம்பித்த போக்குவரத்து
vehicle carrying gas cylinders overturned narrow escape Traffic brought standstill
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற சரக்கு வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நோக்கி ஏராளமான எரிவாயு உருளைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வண்டி ஒன்று புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளப்பட்டி பகுதியை கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வண்டி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள், சரக்கு வண்டியில் இருந்த எரிவாயு உருளைகளில் கசிவு ஏற்பட்டு பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், மிகுந்த எச்சரிக்கையுடன் ஒவ்வொரு உருளையும் வண்டியிலிருந்து பாதுகாப்பாக அகற்றும் மீட்புப் பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த விபத்துக்குள்ளான சரக்கு வண்டி மற்றும் அதிலிருந்த எரிவாயு உருளைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றதால், திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் சரக்கு வண்டி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
English Summary
vehicle carrying gas cylinders overturned narrow escape Traffic brought standstill