கண்ணீரில் டெல்டா விவசாயிகள்...! தஞ்சையில் கொட்டித்தீர்த்த மழையால் 50,000 நெல் மூட்டைகள் நனைந்து நாசம்...! - திறந்தவெளியில் வீணான உழைப்பு!
Delta farmer tears 50000 bundles paddy soaked and destroyed due heavy rain Thanjavur Wasted labor open field
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் பகுதியில் பெய்த திடீர் கனமழை, விவசாயிகளின் பல மாத உழைப்பை ஒரே இரவில் கேள்விக்குறியாக்கியுள்ளது. திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்த சம்பவம் டெல்டா பகுதி விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பட்டீஸ்வரம் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை திடீரென கொட்டித் தீர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டது.
அங்கு லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தற்காலிகமாக குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதுமான அளவு பாதுகாப்பு போர்வைகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான மூட்டைகள் நேரடியாக மழைநீரில் நனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகளுக்குள் மழைநீர் புகுந்து, கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல், பல மாதங்களாக ஒரே இடத்தில் தேக்கி வைத்திருந்த நிர்வாக அலட்சியமே இந்த பெரும் இழப்புக்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தற்போது நனைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக உலர வைக்கவோ அல்லது பாதுகாப்பான சேமிப்பு மையங்களுக்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நெல் மணிகள் முளைக்கத் தொடங்கி முற்றிலும் பயன்பாடற்ற நிலைக்கு சென்று விடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் வியர்வை கலந்த உழைப்பின் பலன் வீணாகாமல் தடுக்க, அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டெல்டா பகுதி விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.மேலும், இந்த அலட்சியத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
English Summary
Delta farmer tears 50000 bundles paddy soaked and destroyed due heavy rain Thanjavur Wasted labor open field