சென்னை-ராமேசுவரம் மற்றும் தூத்துக்குடி-சென்னை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கம்..!
Vande Bharat train service to start soon between Chennai to Rameswaram and Thoothukudi to Chennai
இந்திய ரெயில்வே துறை அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ரெயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது. அதன்படி, முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பகுதி அதி விரைவு சொகுசு வந்தேபாரத் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரெயில்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளதோடு, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நிறுத்தங்களால் பயணம் எளிதாகிறது.
இந்நிலையில், மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை தவிர பிறநாட்களில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இந்த வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பொறுத்தமட்டில் ரெயில்வே வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, இந்த பெட்டிகளை கொண்டு ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு ஒரு வந்தேபாரத் ரெயிலும், தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு ஒரு வந்தேபாரத் ரெயிலும் இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்து, ராமேசுவரம்-சென்னை வந்தேபாரத் ரெயிலுக்கு தென்னக ரெயில்வே பரிந்துரை செய்துள்ளதாக முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.அதன்படி, ராமேசுவரம்-சென்னை இடையே விரைவில் வந்தேபாரத் ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்று தூத்துக்குடி - சென்னைக்கும் வந்தே பாரத் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Vande Bharat train service to start soon between Chennai to Rameswaram and Thoothukudi to Chennai