முதலமைச்சர் விஜய் தலைமையில் செப். 9-ல் தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்! காங்கிரஸ், விசிக தலைவர்களை நேரில் சந்திக்கும் அமைச்சர்கள்!!
TVK Calls Alliance Consultation Meeting on Sept 9 Led by CM Joseph Vijay Left Parties Deliberate Participation
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தலைமையில், வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தவெக ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணி அமைப்பிற்கு முறையான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது மற்றும் வரவிருக்கும் அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தோழமைக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் பணியைத் தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பகுதியாக, தவெக அமைச்சர்களான என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ஏ. ராஜ்மோகன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினர். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரையும் நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கத் தவெக நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற நிலையில், இடதுசாரி கட்சிகள் பங்கேற்காமல் விலகியிருந்தன. தவெக அரசுக்கு வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு அளிப்பதாகவும், ஆட்சி அதிகாரத்திலோ அல்லது முறைசார் கூட்டணியிலோ இணையப்போவதில்லை என்றும் இடதுசாரிகள் தங்கள் நிலப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தனர். தற்போது 2-வது முறையாகச் செப்டம்பர் 9 கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில், தங்களின் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்த பிறகே பங்கேற்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா அல்லது மீண்டும் புறக்கணிப்பை மேற்கொள்ளுமா என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் தீவிரமடைந்துள்ளது.
English Summary
TVK Calls Alliance Consultation Meeting on Sept 9 Led by CM Joseph Vijay Left Parties Deliberate Participation