அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் திப்பிபாறை மலைவாழ் மக்கள்; தவெக அரசாவது நடவடிக்கை எடுக்குமா..?
Tribal residents of Thippipaarai struggle due to a lack of basic amenities
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த அமராவதி அணையை ஒட்டி திப்பிபாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஆனால், இந்த இக்குடியிருப்புக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், கரடுமுரடான ஒற்றையடிப் பாதையையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடியிருப்பு வனப்பகுதிக்கு அருகே இருந்த போதிலும், இங்குள்ள மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
அப்பகுதி மக்கள் ஓடைகளிலும், சுனைகளிலும் கசியும் நீரையே தங்களின் தாகத்தைத் தீர்க்கப் பயன்படுத்தி வருகின்றனர். கோடைக் காலத்தில் நீர்நிலைகள் வறண்டு வருவதால், குடிநீர் சரிவர கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அத்துடன், இவர்கள் குடியிருக்க நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில், ஓலையில் வேய்ந்த கூரை அல்லது 04 மூலைகளில் நடப்பட்ட மரங்களின் இடையே மூடப்பட்ட தார்ப்பாலின் சீட்டுகள்தான் வீடுகளாக உள்ளன. அங்குள்ள குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. சோலார் விளக்கு வசதிகளும் இல்லை.
இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், போதியவெளிச்சம் இன்றி அச்சத்திலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி வயது குழந்தைகள் ஏராளமானோர் உள்ள நிலையில், அவர்களுக்கு போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர்.
இவர்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாததால் இக்குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் அபாயத்தில் உள்ளன. அத்துடன், பெண்கள், குழந்தைகள், முதியவர்களில் பலர் போதிய ஊட்டச்சத்து இன்றி உடல் நல கோளாறுகளுடன் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, திப்பி பாறையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக தளிஞ்சி மற்றும் அதனை ஒட்டிய மலை கிராமங்களில் வசித்து வந்தனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த வனத்துறை அதிகாரிகள், இடம்பெயரும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி இடம்பெயரச் செய்தனர்.
ஆனால், அவர்கள் உறுதியளித்தபடி எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை என்றும், மீண்டும் வனப்பகுதிக்குள் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு செல்ல முடியாதவாறு வனத்துறையினர் கண்காணிப்பில் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலை மாற வேண்டும் என்றும், பூர்வ குடிகளை அவர்கள் இடத்திற்கே சென்று குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அடுத்ததாக பாதிக்கப்பட்ட திப்பிபாறை மலைவாழ் மக்கள் கூறியதாவது: தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சியினர் இங்கு வந்து வாக்குறுதிகளை அள்ளித் தருகிறார்கள். ஆனால், தேர்தல் முடிந்த பின் எங்களைக் கண்டு கொள்வதே இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், எங்கள் பிள்ளைகளின் கல்விக்கும், பாதுகாப்பான வாழ்விற்கும் அடிப்படை வசதிகளை அரசு உடனே செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Tribal residents of Thippipaarai struggle due to a lack of basic amenities