மண்ணுக்குள் ஒளிந்திருந்த சோழர் காலப் பொக்கிஷம்...! - விழுப்புரத்தில் வெளிப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்கள்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் கிராமத்தின் கலைவாணர் தெருவில் அமைந்துள்ள விநாயகர் கோவிலின் வெளிய்புற சாலையோரத்தில், சமீபத்தில் இரண்டு மர்மமான சாமி சிலைகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த தகவலை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவனிடம் பகிர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்குச் சென்று, அந்த இரண்டு சிலைகளையும் நுணுக்கமாக ஆய்வு செய்தது. ஆய்வின் போது, அவை சோழர் காலத்தைச் சேர்ந்த பவுத்தச் சிற்பங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் விளக்கமளிக்கையில், “பெரியதச்சூரில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு சிற்பங்களில் ஒன்றில், வலது காலை கீழே தொங்கவிட்டு, இடது காலை மடக்கி ‘உத்குடி’ ஆசனத்தில் அமர்ந்த நிலையில் ஒரு உருவம் காணப்படுகிறது. அதன் தலையின் மேல் ஐந்து தலை நாகம் விரிந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பவுத்தச் சிற்பமாகும்; இதில் காணப்படும் உருவம் ‘போதிசத்துவர்’ என மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கோ.விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். அருகிலுள்ள ஆலகிராமத்தில் முன்பே பவுத்தச் சிற்பம் கண்டறியப்பட்ட நிலையில், இங்கும் இதுபோன்ற கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சைவம், வைணவம், சமணம் ஆகியவற்றுடன் பவுத்தமும் செழித்து விளங்கியமை தெளிவாகிறது” என தெரிவித்துள்ளார்.மேலும், “மற்றொரு சிற்பம் கலைநயமிக்க துவாரபாலகர் உருவமாகும். நீளமான மகுடம், விரிவான கண்கள், கூர்மையான பற்கள் மற்றும் அழகிய காதணிகளுடன் உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பம் மிகுந்த நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் கால்கள் தற்போது மண்ணுக்குள் புதைந்துள்ளன. இது இப்பகுதியில் முன்பு இருந்த ஏதோ ஒரு பழமையான சிவாலயத்திற்குச் சேர்ந்ததாக இருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.இந்த இரண்டு சிற்பங்களும் கி.பி. 10ஆம் முதல் 11ஆம் நூற்றாண்டுக்குட்பட்ட சோழர் கால கலைப்பண்புகளை பிரதிபலிப்பவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அருகிலுள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த ‘மூத்ததேவி’ (ஜேஷ்டா) சிற்பமும் காணப்படுவது, இந்தக் கிராமம் பல்லவர் மற்றும் சோழர் காலங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மையமாக இருந்ததற்கான உறுதியான சான்றாகும்.
இத்தகைய பாரம்பரியச் சின்னங்களை கிராம மக்கள் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

treasure from Chola era hidden soil Thousand year old sculptures discovered Villupuram


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->