திருநங்கை-2025 அழகி போட்டி..மிஸ் கூவாகமாக நெல்லை ரேணுகா தேர்வு!
Transgender2025 Beauty Contest Miss Kuvaakamaa Nellai Renuka selected
நெல்லையை சேர்ந்த ரேணுகா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி அஞ்சனா 2-ம் இடத்தையும், கோவை ஆஷ்மிகா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகள் தங்கள் குல தெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவாண் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் திருநங்கைகள்,அரவாண் சாமியை கணவராக பாவித்து கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள்.
இவர்களை மகிழ்விக்கும் வகையில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியமிஸ் திருநங்கை-2025 அழகி போட்டி நடைபெற்றது.
இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, தூத்துக்குடி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 25 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 15 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கடைசியாக இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 7 பேரிடமும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் சிறந்த முறையில் பதில் அளித்த நெல்லையை சேர்ந்த ரேணுகா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி அஞ்சனா 2-ம் இடத்தையும், கோவை ஆஷ்மிகா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.11 ஆயிரமும் வழங்கப்பட்டது.
English Summary
Transgender2025 Beauty Contest Miss Kuvaakamaa Nellai Renuka selected