அப்படி போடு..! இனி ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை தண்டனை!
Train Attack stone case
சென்னையின் சில பகுதிகளில் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் ரயில்கள் மீது கற்களை வீசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தானவை என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது. சட்டப்படி, ரயில்கள் மீது கற்கள் வீசினால் குறைந்தது 5 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுள் தண்டனை வரையிலும் விதிக்கப்படலாம்.
எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர் கே.பி. ஜெபாஸ்டியன் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கல்லூரிகள் மற்றும் ரயில் நிலையங்களில் நடத்தி வருகின்றனர். சனிக்கிழமை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது: “சிறார்கள் விளைவுகளை உணராமல் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசுகின்றனர். இது பெரிய குற்றமாகும். அதனால் சட்டத்தில் உள்ள தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ரயிலில் பயணிக்கும்போது அவசர உதவிக்கு 139 என்ற இலவச எண் மற்றும் குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், தண்டவாளத்தின் அருகில் நின்று ஓடும் ரயிலின் முன் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றமாகும். அதுபோலவே, அறியாத நபர்களிடமிருந்து உணவுப் பொருள்களை வாங்கக் கூடாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய இத்தகைய எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன” என்றார்.
இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ரயில் பயணத்தின் பாதுகாப்பு விதிகளை தெளிவுபடுத்துவதையும், தேவையற்ற ஆபத்துகளைத் தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.