சென்னை IT ஊழியருக்கு நேர்ந்த சோகம்..! வங்கி மேலாளர் போலப் பேசி நூதன முறையில் ரூ.1.90 லட்சம் மோசடி...!
Tragedy befalls Chennai IT employee He cheated 1point90 lakhs by pretending bank manager novel way
வங்கியின் பெயரைக் கூறி, கடன் அட்டையின் புதிய திட்டத்தை ரத்து செய்வதாக நம்பவைத்து, மென்பொருள் நிறுவன ஊழியரிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரைப் பற்றிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சுப்புராஜ், சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவரது கைப்பேசி எண்ணுக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், தான் பிரபல தனியார் வங்கியின் மேலாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து, சுப்புராஜின் கடன் அட்டையில் புதிய திட்டம் செயல்பாட்டில் இருப்பதாகவும், அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமானால் உடனடியாக இணையதள முகவரியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இதனை உண்மையென நம்பவைக்கும் வகையில், அந்த மர்ம நபர் சுப்புராஜின் கைப்பேசிக்கு இணையதள இணைப்பு ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

வங்கி மேலாளர் என்ற பெயரில் பேசிய நபரின் வார்த்தைகளை நம்பிய சுப்புராஜ், அவர் அனுப்பிய இணையதள இணைப்பைத் திறந்துள்ளார். அதில் கேட்கப்பட்ட தனது கடன் அட்டை எண் மற்றும் ரகசியக் குறியீட்டு எண்ணையும் பதிவு செய்துள்ளார்.சிறிது நேரத்திலேயே, அவரது கடன் அட்டைக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் எடுக்கப்பட்டதாகக் கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுப்புராஜ், தனது வங்கிக் கணக்கில் இருந்து பெருந்தொகை பறிபோனதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தார்.வங்கி அதிகாரி என்று கூறி அழைத்த மர்ம நபர், கடன் அட்டையின் விவரங்களைப் பெற்றுக்கொண்டு நூதன முறையில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சுப்புராஜ் சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர். நகர் காவலர்களிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், வங்கி அதிகாரி போலப் பேசி பணத்தைப் பறித்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட இணையதள இணைப்பு மற்றும் தொடர்புடைய கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Tragedy befalls Chennai IT employee He cheated 1point90 lakhs by pretending bank manager novel way