குடவாசல் அருகே கோர விபத்து...! கண்முன்னே சாம்பலான கார்...! - உயிர்தப்பிய குடும்பம்
Fatal accident near Kudavasal Car burnt to ashes front our eyes Family that survived
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, குடும்பத்தினருடன் பயணித்துக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரிலிருந்து அதிகளவில் புகை வெளியேறியதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் அதில் இருந்த மூவரும் அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர். இருப்பினும், சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீக்கிரையாகி எரிந்து சாம்பலானது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் காரில் திருக்கருகாவூர் அருகே உள்ள ஊத்துக்காட்டில் வசிக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, குடவாசல் அருகே ஓகை அரசு மேல்நிலைப்பள்ளிப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, அதிலிருந்து அளவுக்கு அதிகமாகப் புகை வெளியேறத் தொடங்கியது. இதைக் கவனித்த வெங்கடேசன், ஏதோ விபரீதம் நிகழப்போவதை உணர்ந்து உடனடியாகக் காரை நிறுத்தினார்.தொடர்ந்து, காரில் இருந்த தனது மனைவி மற்றும் மகனுடன் அவசரமாக வெளியேறினார். அவர்கள் வாகனத்தை விட்டு விலகிய சிறிது நேரத்திலேயே, கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கார் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் அறிந்த குடவாசல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிபாசு தலைமையிலான தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், தீ மளமளவெனப் பரவியதால் காரை முழுமையாகக் காப்பாற்ற முடியவில்லை. தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக, காரில் பயணித்த வெங்கடேசன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினர்.
வெங்கடேசன் பயன்படுத்திய கார், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. காரில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு காரணமாகத் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து குடவாசல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் தீப்பற்றியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Fatal accident near Kudavasal Car burnt to ashes front our eyes Family that survived