மழைநீர் வடிகால் பணிகள்: ரூ.6,000 கோடிக்கு மேல் செலவிட்டும் தீராத வெள்ளப் பிரச்சினை...! - அரசுக்கு வேல்முருகன் கண்டனம்
Rainwater drainage works Flood problem remains unresolved despite spending over 6000 crore Velmurugan condemns government
சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், கனமழையின்போது நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்குவது ஏன் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். வடிகால் பணிகளில் உள்ள குறைபாடுகள், நிலுவையில் இருக்கும் திட்டங்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து அரசு வெளிப்படையான விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"சென்னை மாநகரில் மழைநீர் தேங்குவதையும் வெள்ளப் பாதிப்புகளையும் தடுக்க, கடந்த சில ஆண்டுகளாக மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புக் கட்டமைப்புகளை உருவாக்கப் பொதுமக்களின் வரிப்பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.2026 செப்டம்பர் மாத நிலவரப்படி, 2022-ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளுக்கான மொத்தத் திட்டச் செலவு ரூ.6,066.80 கோடி எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மொத்தம் 1,385 கிலோமீட்டர் நீளத்திற்குத் திட்டமிடப்பட்ட பணிகளில், 1,314 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டும், கனமழை பெய்யும்போது சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் நிலை ஏன் தொடர்ந்து நீடிக்கிறது? மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உண்மையில் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன என்பதை அரசு விளக்க வேண்டும்.
சென்னையில் 105 இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கான இணைப்புகள் விடுபட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 37 இடங்களில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 68 இடங்களில் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனக் கூறப்படுகிறது.மழைநீர் வடிகால்களை அமைப்பதுடன் அரசின் கடமை முடிந்துவிடுகிறதா? அவை அனைத்தும் ஒன்றோடொன்று முறையாக இணைக்கப்பட்டு, மழைநீர் இறுதியாக வெளியேறும் இடம் வரை தடையின்றிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை அரசு உறுதிப்படுத்தியுள்ளதா?
வடிகால்கள் முழுமையாக இணைக்கப்படாமல் இருப்பதும், நீர் வெளியேறும் வழிகளில் தடைகள் இருப்பதும் மழைநீர் தேங்குவதற்குக் காரணமாக அமைகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். முடிக்கப்படாத பணிகளை விரைந்து நிறைவேற்றுவதுடன், ஏற்கெனவே முடிக்கப்பட்ட பணிகளின் செயல்பாட்டுத் திறனையும் அரசு மதிப்பீடு செய்ய வேண்டும்.கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 769 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.3,220 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீட்டில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகும், மழைநீர் தேங்கும் பகுதிகள் தொடர்ந்து இருப்பதற்கான காரணம் என்ன என்பதை அரசு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். திட்டங்களின் தற்போதைய நிலை, அவற்றால் ஏற்பட்டுள்ள பயன்கள், இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
சென்னையில் மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்னென்ன, அவற்றின் அடிப்படையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.நிறைவு பெற்ற பணிகள், இன்னும் நிலுவையில் உள்ள பணிகள், அவற்றை முடிப்பதற்கான காலக்கெடு ஆகிய விவரங்களுடன் கூடிய முழுமையான நிலவர அறிக்கையைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
இதன் மூலம் திட்டங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் வரிப்பணம் முறையாகச் செலவிடப்பட்டுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.மழைநீர் வடிகால் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ஒப்பந்த நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
விசாரணையில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால், அரசுப் பணத்திற்கு இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் திட்டங்கள், மழைக்காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் முழுமையாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Rainwater drainage works Flood problem remains unresolved despite spending over 6000 crore Velmurugan condemns government