தமிழகத்தின் 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!
TN Rain IMD 15 10 2025
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கவிருப்பதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுடன் சேர்ந்து, தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
அவற்றில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் அடங்குகின்றன.
மேலும், வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் முழுமையாக தொடங்கும் நிலையில், வளிமண்டல ஈரப்பதம் அதிகரித்து வருவதால் தென்கிழக்கு காற்றின் வேகம் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் மேகமூட்டம் காணப்படும் நிலையில், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.